பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை
-வாழைச்சேனை நிருபர்-
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவதை தாங்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக ஜரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,
பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை என சொல்லப்பட்டது, இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டதற்கு காரணம் இலங்கை முழவதிலும் உள்ள பிரதேசங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு உள்ளது என்று காட்டுவதற்காகவே என்றார்.
தற்போது வடக்கு கிழக்கிலே மாவீரர் தினம் நடப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துள்ளன, மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெறுகிறது.
இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை என அரசாங்கம் சொல்லும்போது அது தொடர்பான ஒரு பதாதையைக் கூட காட்சிப்படுத்த முடியாத நிலை இன்று மட்டக்களப்பில் காணப்படுகிறது, கிரானில் அது தொடர்பாக கட்டப்பட்ட பதாதையை கிழித்திருக்கிறார்கள்.
விஷமிகளோ, இராணுவத்தினரோ, பொலிசார் செய்தார்களா, யார் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது, எமது மண்ணுக்காக உயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்கள் குறித்து நினைவு தினம் தொடர்பான பதாதையைக் கிரானில் கிழித்திருக்கிறார்கள்.
தரவையில் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் எடுக்கும்போது பல எதிர்ப்புகள் வருவதாக அந்த சமூகம் சொல்லுகிறார்கள்.
இது ஒரு அரசியல் நிகழ்ச்சி இல்லை என்றார், இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான க.சேயோன், நல்லரெட்ணம், சி.வவானந்தன் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டனர்.