சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி தொடர்பில் விரைந்து செயற்பட்ட பணிப்பாளர் நாயகம்

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை காட்டு யானைகள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியின் முன் மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த யானைக் கூட்டம் உள்ளிருந்த வேலியையும் உடைத்ததோடு அங்கிருந்த கரும்புத் தோட்டம் வாழைத்தோட்டம் மரவள்ளி போன்ற பயன்தரும் மரங்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாயம் மற்றும் தொழில் பொறியியல் கற்கை நெறிகளுக்கு பொறுப்பான பகுதித் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ் ரவீந்திரன் தெரிவிக்கையில்,

எமது விவசாய கற்கை மாணவர்கள் வியர்வை சிந்தி உருவாக்கிய அனைத்தையும் இந்த யானைகள் நாசமாக்கி விட்டன. எமது கல்லூரி வளாகத்திற்குள் இவ்வாறு யானைகள் வருவது இதுவே முதற் தடவையாகும் எனினும் இந்நிலை தொடரும் என எமது மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சேதம் ஏற்பட்ட பகுதிகளை விவசாய கற்கை மாணவர்கள் சீர் செய்து வரும் நிலையில் இது தொடர்பில் கல்லூரியின் ஏனைய நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் S.C. ஜகத் இன்று காலை 10.00 மணியளவில் என்னை  தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து வினவியதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

இவ்வாறு சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து இச்சம்பவம் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கிய தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  S.C. ஜகத் அவர்களின்  சேவையானது எமது கல்லூரிக்கும் எமது மாணவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரும் கொடையாகும், என தெரிவித்தார்.

இந்நிலையில், கல்லூரியின் பதிவாளர் அமீர், பிரதம இலிகிதர் ரபாய்தீன் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர் நஸீர் ஆகியோர் சற்று முன் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு, விவசாய மாணவ சங்க பிரதிநிதிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்தனர்.