Last updated on January 4th, 2023 at 06:54 am

அவமானங்களும் கேலிகளும் நன்றாகவே பழகிவிட்டன

அவமானங்களும் கேலிகளும் நன்றாகவே பழகிவிட்டன

 

தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும், சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி சேர்க்கும் விடயத்தில் எந்த வித பின்வாங்கலுமின்றி நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு திட்டத்தின் கீழ் 54 மற்றும் 55 ஆவது கட்டங்களின் கீழ் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு, வைத்தியசாலை உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் போது சிலர் சிரிப்பதாகவும், பாடசாலைகளுக்கு கணனி ஆய்வு கூடம் வழங்கினால் சிலர் சிரிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்நாட்டின் மருத்துவமனை கட்டமைப்புக்கு மூச்சு வேலைத்திட்டத்தின் மூலம் உதவும்போது கூட சிலர் சிரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருடர்களுக்கு மாலை அணிவிக்கும் நாட்டில், அரசியல் டீல்காரர்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்யும் நாட்டில், மேடைகளில் மற்றவர்களை விமர்சித்து விமர்சித்து பழமையான தற்பெருமை பாராட்டப்படும் போது கரகோசம் எழுப்பும் நாட்டில், தமது சமூகப் பணிகளைப் பார்த்து சிரிக்கும் சிலர் இருப்பதில் ஆச்சரியமில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆனால், தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சிலர், மருத்துவமனை கட்டமைப்பிற்குத் தாம் அளிக்கும் உபகரணங்களைக் கொண்டு ஒருநாள் மூச்சு விடுவார்கள் எனவும், தம்மைப் பார்த்துச் சிரிக்கின்ற சிலரின் பிள்ளைகள் தான் நன்கொடை அளிக்கும் பஸ்களிலேயே பாடசாலைக்குச் செல்வார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அவமானங்களும், கேலிகளும் தனக்கு நன்றாகவே பழகிவிட்டன எனவும் அவர் தெரிவித்தார்.