அரையிறுதி போட்டி தோல்வி குறித்து ரோகித் சர்மா விளக்கம்

2022 T20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.

இதனையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ஓட்டங்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிக்கிறது . பேட்டிங்கில் கடைசியில் போராடி நல்ல ஓட்டங்கள் எடுத்தோம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சரியாக இல்லை. 16 ஓவர்களில் இந்த இலக்கை விரட்டும் அளவுக்கான ஆடுகளமல்ல இது. நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்வது மிக முக்கியம் என்றார்.

மேலும் அதை எப்படி எதிர்கொள்வது என யாருக்கும் கற்றுத் தர முடியாது. தனிநபரைப் பொறுத்த விஷயம் இது, பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் நன்கு விளையாடினார்கள். நாங்கள் நன்குப் பந்துவீசியும் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.