புறாக்கள் மூலம் நூதன முறையில் 50 வீடுகளில் கொள்ளை : அதிர்ச்சியில் பொலிசார்!

இந்தியா கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை பொலிசார் வலைவீசி தேடி வந்தனர், ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து குறித்த நபர் திருடிச் செல்கிறார் என்று பொலிசார் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நூதன முறையில் பொலிசாரிடம் சிக்காமல் கொள்ளையடித்து வந்த மஞ்சுநாதன் என்பவரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்த போது, புறாக்களை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையை அரங்கேற்றி வந்த தகவல் பொலிசாரை திகைப்படைய வைத்ததுள்ளது.

அதிக உணர்திறன் கொண்ட புறாக்கள் பொதுவாக அருகில் ஆட்கள் வந்தால் உடனே பறந்து விடும் தன்மை கொண்டது. இந்த உணர்திறனை இவர் சாதகமாக பயன்படுத்தி புறாக்களை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையடிக்க செல்லும்போதும், ஒவ்வொரு முறையும் புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். கொள்ளைக்கு முன் வீடுகளை நோட்டமிடும் இவர் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் மீது 2 புறாக்களை பறக்க விடுவார்.

குறித்த புறாக்கள் பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து சென்று அமர்ந்து சத்தமிடும். இதன்போது வீட்டுக்குள் ஆட்களின் நடமாட்டம் இருந்தால் உடனே புறாக்கள் பறந்து விடும். வீட்டிற்குள் ஆட்கள் இல்லை என்றால் அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருக்கும்.

இந்த சமிக்ஞையை பயன்படுத்தி வீட்டுக்குள் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் மஞ்சுநாதன் தான் கையோடு எடுத்து வரும் இரும்பு ராடைக் கொண்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வெற்றிகரமாக கொள்ளையடித்து வந்துள்ளார்.

சுமார் 50 வீடுகளில் கொள்ளைடித்து பொலிசாரிடம் சிக்காமல் மஞ்சுநாதன் தப்பி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புறாக்களை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.