சி.எஸ்.கே ரசிகர்களுக்காக “Roar26” பிரம்மாண்ட நிகழ்ச்சி

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் Roar26 எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட சென்னை அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் இதில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் முன்னாள் நட்சத்திரங்கள் தற்போதைய சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்களுடன் இணைந்து சுவாரஸ்யமான காட்சிப் போட்டிகளிலும் (Exhibition matches) ஈடுபடவுள்ளனர்.

மேலும் ஒஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மைதானத்தை அதிரவைக்கவுள்ளன.

இந்த கொண்டாட்டத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்கவுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடப்புத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வரும் 30ஆம் திகதி கவுகாத்தியில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.