அரகலய மக்கள் போராட்ட செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது

‘அரகலய’ மக்கள் போராட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள்   சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2022 ஜூலை 13 ஆம் திகதியன்று, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் அரச ஊடக நிறுவனமான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, அதன் ஒளிபரப்பு சேவையை சிறிது நேரம் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் குழு ஒன்று, அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கோரினர்.

எதிர்ப்பாளர்களுக்கு தமது கருத்தை தெரிவிக்க தேசிய தொலைக்காட்சி சேவையில் சுமார் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

அதன் பிறகு தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.