14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி முகாமையாளர்

கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கியின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.ஏ.இளங்கசிங்க நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண் பிள்ளைகளின் ஒற்றைப் பெற்றோரான சந்தேக நபர், கிருலப்பனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பாதிக்கப்பட்ட மாணவியுடன் 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்பில் இருந்ததாகவும், பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்திற்குள் வைத்து குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.