சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர் : சர்ச்சையில் சிக்கிய காவ்யா மாறன்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘த ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதை, இந்திய தொழிலதிபர் காவ்யா மாறனுக்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளமை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நடத்தும் சென்னையைச் சேர்ந்த ‘சன் குரூப்’ நிறுவனமே இந்த அணியின் உரிமையாளராகும்.

இந்திய உரிமையாளர் ஒருவரால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

அப்ரார் அஹ்மதின் பந்துவீச்சு முறைகள் தனித்துவமானவை. பல உள்ளூர் வீரர்களுக்கு அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என்பதால், அவரை வாங்குவதற்கே நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.

பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என எங்களுக்கு எந்தவொரு குறிப்பிட்ட அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. ஏலத்தில் இருந்த அனைத்து வீரர்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தோம்.

இந்த ஏலத்தில் உஸ்மான் தாரிக் (Birmingham Phoenix) என்ற மற்றொரு பாகிஸ்தான் வீரரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹரிஸ் ரவூப், ஷதாப் கான் உள்ளிட்ட முன்னணி பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்ரார் அஹ்மதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி தேர்வு செய்ததை அடுத்து சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் ஆப்ரேஷன் சிந்தூர் சமயத்தில் அப்ரார் அஹ்மதின் சில சமூக வலைதள பதிவுகள் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்த நிலையில், அவரை எப்படி சன்ரைசர்ஸ் அணி ஒப்பந்தம் செய்யலாம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தற்போது 27 வயதான அப்ரார் அஹ்மது பாகிஸ்தானுக்காக இதுவரை 38 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர அவர் ஒட்டுமொத்தமாக, 84 டி20 போட்டிகளில் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.