அதிக விருதுகளை வென்றது ‘One Battle After Another’
2025ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் 98ஆவது அகாடமி விருது (Oscars) வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹொலிவூட்டில் உள்ள டொல்பை தியேட்டரில் (Dolby Theatre) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் (Conan O’Brien) தொகுத்து வழங்கிய இந்த விழாவில், 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சர்வதேச சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டின் அதிக விருதுகளை வென்ற திரைப்படமாக ‘One Battle After Another’ உருவெடுத்தது. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் (போல் தோமஸ் ஆண்டர்சன்) உட்பட மொத்தம் ஆறு ஒஸ்கார் விருதுகளைத் தன்வசப்படுத்தியது.
அத்துடன் சிறந்த துணை நடிகர் (ஷான் பென்), சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிக தேர்வு (Casting) மற்றும் சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளிலும் இவ்விருதுகளை வென்றது.
சிறந்த நடிகர்: ‘Sinners’ திரைப்படத்தில் ஆற்றிய சிறப்பான நடிப்பிற்காக மைக்கேல் பி. ஜோர்டான் (Michael B. Jordan) சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
சிறந்த நடிகை: ‘Hamnet’ என்ற வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்த ஜெஸ்ஸி பக்லி (Jessie Buckley) சிறந்த நடிகையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த துணை நடிகர்: மூத்த நடிகர் ஷான் பென் (Sean Penn) தனது மூன்றாவது ஒஸ்கார் விருதை இதன் மூலம் பெற்றுக்கொண்டார். (இதற்கு முன்னர் ‘Mystic River’ மற்றும் ‘Milk’ ஆகிய படங்களுக்காக அவர் விருது வென்றிருந்தார்).
சிறந்த துணை நடிகை: ‘Weapons’ படத்தில் நடித்த ஏமி மேடிகன் (Amy Madigan) இவ்விருதை வென்றார். அவர் தனது ஏற்புரையில் கணவர் எட் ஹாரிஸிற்கு உருக்கமான நன்றிகளைத் தெரிவித்தார்.
Sinners: இத்திரைப்படம் சிறந்த மூலத் திரைக்கதை (ரியான் கூக்லர்), சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளை வென்றது.
சர்வதேசத் திரைப்படம்: நோர்வே நாட்டின் ‘Sentimental Value’ சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருதை வென்றது. இவ்விருதைப் பெறும் முதல் நோர்வே நாட்டுத் திரைப்படம் இதுவாகும்.
அனிமேஷன் & இசை: ‘KPop Demon Hunters’ சிறந்த அனிமேஷன் படமாகவும், அதன் “Golden” பாடல் சிறந்த மூலப் பாடலாகவும் தெரிவு செய்யப்பட்டன.
தொழில்நுட்ப விருதுகள்: ‘Frankenstein’ திரைப்படம் தயாரிப்பு வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை ஆகிய 3 விருதுகளை வென்றது. ‘Avatar: Fire and Ash’ சிறந்த காட்சி விளைவுகளுக்கான (Visual Effects) விருதையும், ‘F1’ திரைப்படம் சிறந்த ஒலிக்கான விருதையும் வென்றன.
ஆவணப்படம்: ‘Mr. Nobody Against Putin’ சிறந்த ஆவணப்படமாகத் தெரிவு செய்யப்பட்டது.
குறும்படம்: ‘The Singers’ மற்றும் ‘Two People Exchanging Saliva’ ஆகிய இரண்டு படங்கள் சமநிலையில் (Tie) வெற்றி பெற்று விருதைப் பகிர்ந்து கொண்டன.






