ஓமான் நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் வருவதை  தவிர்க்குமாறு, ஓமான் பொலிஸார் அறிவித்துள்ளதாக,  ஓமானில் உள்ள இலங்கை தூதரகம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்றும், சுற்றுலா விசாக்கள் மூலம் தனிநபர்கள் ஓமானில் வேலையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து வேலை தேடுபவர்கள், ஓமானில் சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பைத் தேடும்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  வழங்கிய, விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும், என்று மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்தும் தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த பிறகு,  ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக,  தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

31 அக்டோபர் 2023 முதல் அமுலுக்கு வரும்  வகையில்,  ஓமான் பொலிஸாரால் வெளியிடப்பட்ட  அறிவிப்பில்,  சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவது தடைசெய்யப்பட்டது என்றும், வேலை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஏற்கனவே ஓமானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், என்று இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

விசா காலாவதியான பிறகும் ஓமானில் தங்கியிருப்பவர்கள்  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், ஓமான் அதிகாரிகள் விதிக்கும் தண்டப்பணத்தை செலுத்த வேண்டிய நிலை வரும், என  ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் எச்சரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்