பசறை மொனராகலை வீதி விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியில் பயணித்த 19 வயதுடைய கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் குறித்த இளைஞனின் தந்தை (வயது 50) படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், மொனராகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்ந உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

பசறை பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டதால் பின்னால் சென்ற லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.