சர்வதேச மன்னிப்பு சபை பொலிஸாருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

சர்வதேச மன்னிப்பு சபை பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமை  கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் வாயுவை பயன்படுத்தியதன் விளைவாக ஒரு எதிர்ப்பாளர் கொல்லப்பட்டார்.

மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புசபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரேயா,

‘இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையை எளிதாக்க வேண்டும்’ என்று கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போதான காணொளி காட்சிகளின்படி, எதிர்ப்பாளர்கள் கலைந்து செல்லவோ அல்லது தப்பிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருந்துள்ளனர்.

எனினும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் தரநிலைகளை மீறி இலங்கை பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் வாயுவைப் பயன்படுத்தினர் என்று ஹரீந்திரினி கொரேயா சுட்டிக்காட்டியுள்ளார்.

“போராட்டங்களின் பின்னணியில் பதிவான மரணங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

இதன்மூலம் பொறுப்பானவர்கள் அனைவரும் நியாயமான விசாரணைகளில் சட்டத்துக்கு முன் கொண்டு வரப்படுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்