அதிபரின் பிரியாவிடை நிகழ்விற்கு 4.81 இலட்சம் செலவு : விசாரணை கோரும் பழைய மாணவர் சங்கம்
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரின் பிரியாவிடை நிகழ்வுக்காக சுமார் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 650 ரூபா செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
விசுவமடு மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்து ஓய்வு பெற்று சென்ற ஒருவருக்கு மணிவிழா செய்வதாக கூறி ஆசிரியர் நலம்புரிச் சங்கத்திலோ அல்லது பாடசாலையின் வங்கிக் கணக்கிலோ நிதி சேகரிக்கப்படாமல் பாரிய நிதி தொகையினை பெற்று மணிவிழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வினை பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தலைமை தாங்கி செய்யப்பட்டதுடன் பாடசாலையில் இருந்து விலகிய மாணவர்களிடமும் பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பாடசாலையில் நிகழ்வினை ஏற்பாடு செய்த நிலையில் பாடசாலை சார்ந்த இயங்குகின்ற எந்த ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழும் பணம் பற்று வைக்காமல் நிதி கையாளப்பட்டுள்ளதாக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் எழுத்து மூலம் பாடசாலைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரை கௌரவிக்க வேண்டியது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல இலட்சம் ரூபாய் செலவில் நிகழ்வு நடத்த வேண்டிய தேவை இல்லை .
அதுமட்டுமல்லாது பாடசாலை சார்ந்த நிர்வாக கட்டமைப்புக்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக நிதி சேகரிக்கப்படாமல் நிதி கையாளப்பட்டமை தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.