லசித் மலிங்கவின் தேடலில் 3,500 இற்கும் மேற்பட்டோர் பதிவு!

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் திறமை தேடல் நிகழ்ச்சிக்கு 3,500 இற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புதிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட மலிங்க, தற்போதைக்கு பதிவு செய்யும் இணையத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், புதிய விண்ணப்பதாரர்களுக்காக குறித்த இணையத்தளம் எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

தற்போது பதிவு செய்த 3,500 பேரில், ஒவ்வொரு கட்டத்திலும் சுமார் 350 பந்துவீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் திட்டம் மொத்தம் 10 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 350 வீரர்களின் பட்டியல் நாளை புதன்கிழமை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனது செய்தியைப் பகிர்ந்துகொண்ட மலிங்க, “நீங்கள் நின்றாலும், நான் நிற்கமாட்டேன்” (Even if you stop, I will not stop) எனத் தெரிவித்துள்ளார்.