வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாளை புதன்கிழமை வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்திலிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.