சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு
விளையாட்டில் சாதனை படைத்த களுதாவளை தேசியபாடசாலை மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பாடசாலை ரீதியில் முதலாம் இடம் பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், திட்டமிடல் பிரிவு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.தனுசியா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி.ஜெயந்திமாலா, கணக்காளர் எஸ்.சுதர்சனா, உதவிக்கல்விப் பணிப்பாளர்களான ரி.இதயகுமார், எஸ்.சுரேஸ், என்.நேசகஜேந்திரன் உட்படபழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டப்போட்டியானது கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டு மைதானத்தில் கடந்த 05 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரைநடைபெற்றிருந்தது. இதில் களுதாவளை மகாவித்தியால தேசியபாடசாலையானது 123 புள்ளிகளைப்பெற்று மாகாணத்தில் முதலாவது இடத்தினை சுவீகரித்துக்கொண்டது. இங்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 15 தங்கப்பதக்கங்கள், 09 வெள்ளிப்பதக்கங்கள், 08 வெங்கலப்பதக்கங்கள் தனதாக்கிக்கொண்டதுடன் 09 விளையாட்டுக்களில் புதிய சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளது.
மெய்வல்லுனர் போட்டியில் ஆண்கள் முதலாம் இடத்தினையும், மெய்வல்லுனர் பெண்கள் பிரிவில் முதலாம் இடம், அஞ்சல் குழு பெண்கள் பிரிவில் முதலாம் இடம், அஞ்சல் குழு ஆண்கள் பிரிவில் இரண்டாம் சம்பியன் இடத்தினையும் களுதாவளை தேசியபாடசாலை பெற்றுள்ளது.
பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமைதேடிக்கொடுத்த வீர,வீராங்கனைகள் கிராமத்தின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற பொதுமக்கள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாடசாலை முன்றலில் பேண்ட வாத்தியங்கள் முழங்க அதிதிகளினால் மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். போட்டிகளில் மாணவர்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்த வழிகாட்டிய உடற்கல்வி சார்ந்த ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் இவ் விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
