மாதவிடாய் – வறுமை – கல்வி

சமூகத்தில் பெண்களுடன் தொடர்புபட்டு காணப்படும், வரையறைகள் மற்றும் சம்பிரதாயங்களை, இன்றும் கடைபிடிப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன.

இவ்வாறான விவாதங்களில் பெண்களின் “மாதவிடாய்” ( Menstruation) என்ற விடயமும் அடங்குகின்றது.

மாதவிடாய் – வறுமை – கல்வி

‘நீ ஏன் நேற்று ஸ்கூலுக்கு வரவில்லை..’ என்று ஆசிரியர் கேட்கும் போது, ‘பீரியஸ்ட் ரீச்சர்..’ என்று மாணவி பதிலளிக்கையில், ‘எல்லா பிள்ளைக்கு தானே இந்த பிரச்சினை..? ஒவ்வொரு மாசமும் இதுக்கு நீ லீவு எடுப்பியா..?’ என்று ஆசிரியர் கேட்பார்

இந்த உரையாடல் பல பாடசாலைகளில் வகுப்பறைகளில் இடம்பெறுகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் பின்தங்கிய பிரதேசங்களில்.

இங்கு மாதவிடாய் நாட்களில், அந்த மாணவி என்ன காரணத்திற்காக பாடசாலைக்கு வரவில்லை என்று ஆசிரியரும் கேட்பதில்லை, மாணவியும் சொல்வதில்லை.

பெரும்பாலும் இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும், அது வறுமை. (பாடசாலைக்கு வராமல் இருக்க இதை ஒரு காரணமாக பயன்படுத்தும் மாணவிகளை தவிர்த்து)

மாதவிடாய் நாட்களில், அணையாடை (Sanitary pads) வாங்க முடியாத வறுமையான நிலையில் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு அந்த நாட்களில் வருவதில்லை.

இந்த சிறுமிகள் அணையாடைக்கு பதிலாக துணிகளை பாவிக்கிறார்கள்.

6 மணித்தியாலம் பாடசாலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை, அதிக ரத்தப்போக்கு இருக்கும் மாணவிகளுக்கு அந்த துணிகளோடு தாக்கு பிடிக்க முடியாது, பாடசாலை சீருடையின் நிறம் வெள்ளை, இப்படி பல சிரமங்கள், அந்த சிரமங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக பாடசாலையை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதை ஒரு சாதாரண விடயமாக பார்ப்பதே தவறு.

பல பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பெண் பிள்ளைகள், மாதவிடாய் நாட்களில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

பின்தங்கிய வறுமைக்குள் வாழும், குடும்பங்களில் உள்ள சிறுமிகளின் கல்வியில் ஏற்படும் வீழ்ச்சியில், “மாதவிடாயும்” கணிசமான பங்கை வகிக்கிறது.

மாதவிடாய் காலங்களில் இந்த சிறுமிகள் அணையாடைகளை வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் .

இலங்கையை பொறுத்தவரையில், ஒரு அணையாடை பக்கற் வாங்க சுமார் 300 ரூபாய் வரை செலவிடப்படுகின்றது. உணவுக்கே திண்டாடும் குடும்ப வறுமையில், அணையாடைகளை வாங்குவது என்பது இந்த சிறுமிகளுக்கு சாத்தியமற்றதாக இருக்கின்றது.

அவர்கள் அணையாடைகளுக்கு பதிலாக, பழைய துணிகள் மற்றும் மாற்று வழிகளை பயன்படுத்துகின்றனர். சில நேரங்கள் இது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றது.

கிருமித்தொற்று, ஒவ்வாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அவர்கள் உடல்நலம் கேள்விக்குறியாகின்றது.

இதனால் இந்த சிறுமிகள், மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்கு போவதை தவிர்க்கின்றனர், இதனால் இவர்களின் கல்வியில் பின்னடைவு ஏற்படுகின்றது.

இலங்கையில் கடந்த வருடம், இரண்டோ அல்லது மூன்று மாதங்கள் அணையாடை வாங்குவதற்கான வவுச்சர்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும், வறுமை காரணமாக, அணையாடைகளுக்காக கொடுக்கப்படும் வவுச்சர்களை கொண்டு சென்று, வேறு அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்

அதுமட்டுமன்றி, இப்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களை, இன்னொருவருக்கு கொடுத்து, அதற்குரிய பணத்தை பெற்று அந்த பணத்தில் மது அருந்தும் தந்தைமாரும் இருக்கிறார்கள். இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமையை, ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் மூலம் அறியலாம்.

அதேவேளை, அணையாடைகள் போன்ற அத்தியாவசிய சுகாதார பொருட்களுக்கு வரி விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இது பெண்களின் பிரச்சினை அல்ல, இது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கவிருக்கும் சிறுமிகளின் பிரச்சினை, மாணவிகளின் பிரச்சினை.

தற்போது இலங்கையில் கல்வி அமைச்சர் ஒரு பெண், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஒரு பெண். ஆகவே மாணவிகளுக்கு அணையாடை வழங்கும் விடயத்தில் ஏனோதானோ என செயற்படாமல், கரிசனையோடு இவர்கள் செயற்பட வேண்டும்.

பாடசாலையில் சிறுமிகளுக்கு அணையாடைகள் வழங்கும் திட்டத்தில் வவுச்சர்களை வழங்காமல், அணையாடைகளை வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி அவசியம், விழிப்புணர்வு அவசியம் என்று கேட்கப்படும் தற்போதைய நிலையில், மாணவர்களுக்கு மத்தியில் வைத்து மாணவிகளுக்கு அணையாடைகள் வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் நேரப்போவதில்லை.