வருமானத்தை விட செலவுகள் 21 மடங்கு அதிகம்
அம்பாந்தோட்டை- மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் ( National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது.
மத்தள விமான நிலையத்தின் 2021ஆம் ஆண்டு வரிக்குப் பிந்திய நிகர நட்டம் 400 கோடி ரூபாவாகவும், 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வரிக்குப் பிந்திய நிகர இழப்பு 2000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என கணக்காய்வுத் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் தொண்ணூற்றாயிரத்து எழுநூற்று நாற்பத்தேழு பயணிகளே வந்துள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.
விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எடுக்கப்பட்ட 19 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 261 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது