சீன மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
-மன்னார் நிருபர்-
சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் அமுலாக்கத்தில் குறித்த உலர் உணவு பொதிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர், பிரதித் தூதுவர் ஹுவெய் , இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் தலைமை அரசியல் அதிகாரி மற்றும் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லுவோ சோங், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளர் வென்சாங், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.கெனடி, ராணுவ உயர் அதிகாரிகள் இணைந்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து வறிய, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்கு உள்ளான 1380 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 300 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது, ஏனையவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.