அமேசான் காட்டில் காணாமல் போனவர் 31 நாட்களின் பின் மீட்பு : பூச்சிபுழுக்களை நின்றும் , சிறுநீரை குடித்தும் உயிர் பிழைப்பு
அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக பூச்சி புழுக்களை சாப்பிட்டும் , சிறுநீரை குடித்தும் உயிர் வாழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பிரேசிலில் உள்ளது அமேசான் காடு. இது சுமார் 55 இலட்சம் கிலோமீற்றர் பரப்பளவை கொண்டது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த காட்டில் 390 பில்லியன் மரங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு விதமான மரங்கள்.
இந்த காடானது 9 நாடுகளுக்கு சொந்தமானது. இது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது. பிரேசிலில் 58சதவீத எல்லையை இந்த காடு கொண்டுள்ளது.
மேலும் பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசுலா, கியானா, சுரிநேம், பிரெஞ்ச் குயானா, ஈகுடார் ஆகிய நாடுகளுக்கும் இந்த அமேசான் காடுகள் சொந்தமாகும்.
இங்கு அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படும். அண்மையில் கூட ஒரு பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு நிறைய மரங்கள் அழிந்தன. இங்கு மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மூலிகைகள் மூலம் நோயை குணப்படுத்த மாத்திரைகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த காட்டை சுற்றி பார்க்க பொலிவியவை சேர்ந்த 30 வயது ஜொனாட்டன் அகோஸ்டா தனது நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் அவர் வழி தவறி தனது நண்பர்களிடமிருந்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து அகோஸ்டாவை அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் தேடிய நிலையிலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
சுமார் 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரும் அகோஸ்டா உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் இனி இல்லை என இருந்த நிலையில் மீட்புக் குழுவினரால் இவர் உடல் மெலிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தான் வழி தடுமாறி காட்டின் பல பகுதிகளிலும் சுற்றித்திரிந்த நிலையிலும் தன்னை யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாராம். 31 நாட்களுக்கு சாப்பிட வெறும் பூச்சி, புழுக்களை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அங்கு மழை பெய்யும் போதெல்லாம் தனது ஷு க்களில் தண்ணீரை தேக்கி வைத்து பிடித்து குடித்துள்ளார். அந்த தண்ணீர் காலியாகிவிட்டால் தனது சிறுநீரை கூட பிடித்து குடித்துள்ளார்.
மேலும் அகோஸ்டா 31 நாட்களாக எதையும் சாப்பிடாமல் இருந்ததால் அவரது எடை 17 கிலோ குறைந்துவிட்டது. மேலும் அவரது உடலில் இருந்து நீர் சத்து குறைந்துள்ள நிலையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் அகோஸ்டா தண்ணீர் குடிக்க கடவுளிடம் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக் கொள்வாராம். வேட்டைக்கு சென்றதால் இத்தனை ஆபத்து இருந்ததை உணர்ந்த அகோஸ்டா இனி வேட்டையாடுதலை விட்டுவிடுவதாக உறுதி அளித்துள்ளார்.


