
தங்க நகைகளை திருட அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்க முயன்றவர் கைது!
மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானம் ஒன்றில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த தங்க நகைகளைத் திருடுவதற்காக கல்லறையைத் தோண்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இச்செயலில் ஈடுபட்ட மயானக் காப்பாளர் மற்றும் இருவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த 15-ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் ஏழாம் நாள் தானம் (நினைவுச் சடங்கு) நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், அவரது மகள் ராவத்தாவத்தையிலுள்ள “சுசான் அரம” மயானத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற மகள், மூவர் தனது தாயின் கல்லறையைத் தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அந்த நபர்கள், “தங்கள் திட்டம் தோல்வியடைந்துவிட்டது” எனக் கூறிவிட்டு மயானத்தின் மதில் வழியாகப் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.
மகளின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர், அந்த மயானத்தின் காப்பாளர் எனத் தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், மது அருந்திய பின் மயானத்தில் குழி தோண்டும் ஏனைய இருவருடன் இணைந்து, சடலத்திலிருந்த நகைகளை எடுப்பதற்காகவே இந்தக் கல்லறையைத் தோண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இறந்த பெண்மணி எட்டு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்ததாகத் தவறாகக் கருதி, உடலைத் தோண்டுவதற்கு நேற்றைய தினத்தைத் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.
எனினும், சடலத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகள் என அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளைத் திருடுவதற்காக இச்செயல் நடத்தப்பட்டதா அல்லது சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சவப்பெட்டியைத் திருடுவதற்காகவா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
