துப்பாக்கி முனையில் சொகுசுகார் பறிப்பு

பொதுவெளியில் வைத்து ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இந்த மிரட்டல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று கண்டோன்ட்மென்ட் பகுதி. இங்கு, கடந்த சனிக்கிழமை அதிகாலை உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற 35 வயது நபர் வந்துள்ளார். கண்டோடன்மென்ட் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜரேரா கிராமத்தின் பகுதியில் ராகுல் தனது வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் வந்துள்ளார். சாலை ஓரத்தில் அவர் காரை ஓரம் கட்டி இறங்கினார். அப்போது, பைக்கில் மூன்று நபர்கள் அங்குவந்தனர். அந்த மூவரில் சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரை மிரட்டுகிறார்.

அந்த நபர் மக்களை உதவிக்கு அழைக்கும் நோக்கில் மெல்ல நகர்ந்து செல்ல முயற்சிக்கிறார். பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய அங்கிருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அருகே செல்ல முயன்றனர். அப்போது, மற்ற இரு கூட்டாளிகளும் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை நீட்டி அங்கிருந்தவர்களை மிரட்டினர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரும் வெளியேறிய நிலையில், ராகுலிடம் இருந்து கார் சாவியை மிரட்டி வாங்கினர். இரு காரையும் ஒட்டி திருடி சென்றனர். மற்றொருவர் வந்த பைக்கை எடுத்து சென்றார். ஒட்டுமொத்த குற்றச் சம்பவத்தையும் எந்த வித பதற்றமோ பரபரப்போ இன்றி மூன்று திருடர்களும் அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் அப்படியே சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதிர வைக்கும் காட்சிகளை கைப்பற்றிய காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகிறது. பொதுவெளியில் அச்சமின்றி மூன்று பேர் துப்பாக்கி காட்டி மிரட்டி ஒருவரிடம் இருந்து காரை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.