துருக்கியில் LGBTQ+ சமூக உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், அய்டின் மற்றும் மெர்சின் உள்ளிட்ட 15 மாகாணங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கையின் கீழ் LGBTQ+ அமைப்புகளின் அலுவலகங்கள், சில பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக், 162 சந்தேகநபர்கள், 9 அமைப்புகள் மற்றும் 13 வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். குழந்தைகள், குடும்ப அமைப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதே நடவடிக்கையின் நோக்கம் என அரசாங்கம் கூறியுள்ளது.
இதனிடையே, LGBTQ+ உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அம்னஸ்டி இன்டர்நேஷனல், 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 23 பேர் விசாரணைக்கு முன்பான காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், LGBTQ+ அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பல இணையத்தளங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி இஸ்தான்புல் நீதிமன்றம் முன்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராய்ட்டர்ஸ் தகவலின்படி, அந்தப் போராட்டங்களில் 126 பேர் தடுத்து வைக்கப்பட்டதுடன், குறைந்தது 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கம் தனது நடவடிக்கைகள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் என விளக்கியுள்ளது.










