
கிளிநொச்சி பாடசாலையில் தாக்குதல் : பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் அடிதடியில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி சாந்தபுர கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
அதன்போது, திடீரென பாடசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மாணவர்கள் மீதும், அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு சென்ற நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குண்டர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
