தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் பாலியல் வன்புணர்வு?

-மஸ்கெலியா நிருபர்-

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவக்கிடங்கில், உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம், வைத்தியசாலை ஊழியர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இச்செயலை செய்தவர்களை கைது செய்யுமாறும் தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிக்கையில்,

கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி, ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

பெப்ரவரி 25 ஆம் திகதி, சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த போது, அன்றிரவு குறித்த சடலம் சிலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி பரபரப்பான சூழல் அங்கு உருவானது.

இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .

இதன்போது அங்கு வந்த பொலிஸாரிடம், நாங்கள் விடயத்தை கூறி வைத்தியசாலை அதிகாரிகளிடம் விசாரிக்குமாறு கோரினோம்.

இதன்போது, வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர், சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அன்று இரவு பிரேத அறைக்குள் மூன்று பேர் சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். மேலும் பிரேத பிரசோதனையின் பின் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலை, அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது மாறுபட்டதாக இருந்ததை நாங்கள் அவதானித்தோம், என தெரிவித்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கடந்த 10 நாட்களாக விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் இன்னும் அந்த வைத்தியசாலையிலேயே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் பாரதூரமான விடயம், ஆகவே அதை பொலிஸாரின் மூலமாக தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்

அதன்படி, தற்போது இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட வேண்டும் இல்லாவிடில் நாங்கள் மேலதிகமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்

நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளோம், என அவர் தெரிவித்தார்.