புதிதாகப் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் (CBS) பாதுகாக்குமாறு, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், தூய்மையைப் பேணுவதற்கும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் உதவுமாறு பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.
பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிரமான பணிகள் மற்றும் பாரிய செலவினங்களுக்கு மத்தியில், பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்தும் மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் மத்திய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட வளாகத்தில் சில நபர்களால் மேற்கொள்ளப்படும் முறையற்ற பயன்பாடுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டும் சம்பவங்கள் குறித்து போக்குவரத்துச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
குப்பைகளை ஒதுக்கப்பட்ட தொட்டிகளில் பொறுப்புடன் அப்புறப்படுத்துமாறும், பேருந்து நிலைய வளாகத்திற்குள் தூய்மையைப் பேண உதவுமாறும் இலங்கை போக்குவரத்துச் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், பொதுப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இருக்கைகள், சுவர்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறும் பயணிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பேருந்து நிலையம் என்பது எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தேசியச் சொத்து என்பதை நினைவூட்டிய போக்குவரத்துச் சபை, பொறுப்புடன் செயல்பட்டு இக்கட்டமைப்பைப் பாதுகாக்க உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய பேருந்து நிலையத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

