சற்றும் வேகம் குறையாமல் மீண்டும் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதம் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சேர் ஜேம்ஸ் அண்டர்சன், தற்போது தனது 25ஆவது தொழில்முறை சீசனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இவருக்கு, கடந்த 2025 ஏப்ரல் மாதம் ‘நைட்ஹுட்’ கௌரவம் வழங்கப்பட்டது.
தற்போது 43 வயதாகும் அண்டர்சன், 2026-ஆம் ஆண்டுக்கான கவுண்டி சம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் (Lancashire) அணியின் முழுநேர தலைவராக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காஷயர் அணியுடன் தனது ஒப்பந்தத்தை 2026 இறுதி வரை நீடித்துள்ள அவர், கடந்த பருவத்தில் இரண்டாம் பிரிவிற்குத் தள்ளப்பட்ட தனது அணியை மீண்டும் முதல் பிரிவிற்கு கொண்டு வருவதே தனது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
அண்டர்சன் தலைமையிலான லங்காஷயர் அணி, தனது முதல் போட்டியை ஏப்ரல் 3,2026 அன்று நோர்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
2025 பருவத்தில் 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தனது பந்துவீச்சுத் திறன் இன்னும் குறையவில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
தற்போது புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் கிராஃப்ட் தலைமையில் அண்டர்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் அவரது பந்து வீச்சு வேகம் குறையாமல் இருப்பது இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
