
யாழ் இளைஞன் போலி கடவுச் சீட்டுடன் விமான நியைலயத்தில் கைது: சுவிஸ் மாமா மோசடிக்கு 4 மில்லியன் உதவி
-இரண்டாவது இணைப்பு-
4 மில்லியன் ரூபா பெறுமதியான போலியான கனேடிய பயண ஆவணத்துடன் கனடா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டோஹார் செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான யூல் 217இல் புறப்படவிருந்த ஆண் பயணியின் கனேடிய கடவுச்சீட்டில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள குடியேற்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர் டோஹாரில் இருந்து கனடாவுக்கு மற்றொரு விமானத்தில் ஏற இருந்தார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவினரின் விசாரணையின் போது அவரது கனேடிய கடவுச்சீட்டு போலியானது என்பதைக் கண்டறிந்தார்.
மேலும் அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, அவரது உண்மையான இலங்கை கடவுச்சீட்டையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் கட்டுநாயக்க – கொழும்பு பிரதான வீதியில் 18 மைல் கல்லுக்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து போலி கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது மாமா ஒருவரே கனேடிய கடவுச்சீட்டை தயார் செய்து தர 4 மில்லியனுக்கு ஏற்பாடு செய்ததாக , குடிவரவு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
பயணி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறை பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.
