வெள்ள நீர் மதகினை மூடி கட்டப்பட்ட வர்த்தக நிலையம்

 

வலி. கிழக்குப் புத்தூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கரந்தான் சந்திப் பகுதியில் வெள்ள நீர் பாய்ந்து செல்லும் மதகினை தனியார் வர்த்தகத் தொகுதியின் உரிமையாளர் ஒருவர் மூடி கட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த கடத்தொகுதியின் உரிமையாளர் கடையின் முன்பக்கமாக உள்ள நிலத்துக்கு சீமந்தினால் மேடை அமைத்துள்ளார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான அருகில் காணப்பட்ட வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கின்ற மதகினையும் சீமெந்தினால் மூடி அடைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அப் பகுதி மக்களும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உரிமையாளருக்கு தெரியப்படுத்தவும் அதனை அவர் அகற்றுவதற்கு பின்னடித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த மதகு தமது திணைக்களத்துக்கு சொந்தமாக காணப்படுவதுடன் சட்ட விரோதமான முறையில் மதகினை மூடி அமைத்தமை தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்கு எழுத்து மூலம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோசிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கடைத் தொகுதியை கட்டுவதற்கான அனுமதி பிரதேச சபையில் பெறப்பட்டது.

ஆனால் முன் புறமாக மதகினை மூடி அமைக்கப்பட்ட நிலம் தொடர்பில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை.

ஆகவே வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாக கடிதம் கடந்த வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற நிலையில், அவர்களின் ஆலோசனையுடன் செயலாளரை நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.