Last updated on January 4th, 2023 at 06:54 am

இலங்கையர்கள் இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம்

இலங்கையர்கள் இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம்

சார்க் SAARC பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியால் இந்திய ரூபாயை (INR) ‘நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக’ சமீபத்தில் அங்கீகரித்ததன் மூலம், இலங்கை வங்கி (BOC) அதன் சென்னை கிளையுடன் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்யக்கூடிய முதல் vostro கணக்கு திறக்கப்பட்டது.

இந்த புதிய முயற்சியின் மூலம், இலங்கையர்கள் இப்போது நேரடியாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய முடியும், இதன் மூலம் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது ஏற்படும் டொலர் தட்டுப்பாடு பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பங்காளித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஆதரிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இந்திய ரூபாயை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக நியமிக்க நடவடிக்கை எடுத்தது.

இந்திய ரூபாய்க்கு கூடுதலாக, அவுஸ்திரேலிய டொலர்கள், நோர்வே குரோனர் மற்றும் கனேடிய டொலர்கள் உட்பட 15 வெளிநாட்டு நாணயங்களுக்கும் மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் இந்திய ரூபாயை (INR) ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக வகைப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் கோரியது, இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்தியத் தரப்பு ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்புதலுடன், இலங்கையர்கள் இப்போது அமெரிக்க டொலர் 10,000 மதிப்புள்ள இந்திய ரூபாய்களை (INR) தம்வசம் வைத்திருக்க முடியும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறு நாணயங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்பது இங்கு மிகவும் விசேடமான விடயமாகும்.

இந்த வசதியை செயல்படுத்த, இலங்கை வணிக வங்கியில் ‘INR vostro’ என்ற சிறப்புக் கணக்கைத் திறப்பதற்கு இந்திய வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு இலங்கை வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளது. vostro கணக்குகள் இரு நாடுகளின் இரண்டு வங்கிகளுக்கிடையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.