ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் (CWE) தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஊழல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் சுமார் 1000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தில் 153 பணியாளர்களை 2010 – 2014 வரை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் 40 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது.

முதலாம் குற்றவாளியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 5 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​குற்றப்பத்திரிகைகளுக்கு எதிராக பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த வழக்கை நவம்பர் 1ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தார்.