இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ள இந்திய அரசு

2026-2027 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுகளுக்காக, தகுதிவாய்ந்த 200 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவம், துணை மருத்துவம் (Paramedical) மற்றும் சட்டத்துறைகளுக்கான படிப்புகள் இதில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship)
பொறியியல், அறிவியல், வர்த்தகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) படிப்புகளுக்கு இது பொருந்தும்.

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship)
முதுகலை பட்டப்படிப்புகளுக்கானது. இதில் பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship)
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் இளங்கலை தொழில்நுட்ப (B.Tech) படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கொமன்வெல்த் புலமைப்பரிசில் திட்டம் (Dr. A.P.J. Abdul Kalam Commonwealth Scholarship):
பொறியியல், அறிவியல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) படிப்புகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேற்கூறிய திட்டங்கள் ஒவ்வொன்றும் பாடநெறியின் முழு காலத்திற்கும் முழு கல்விக் கட்டணம், மாதாந்திர உணவுப் படி மற்றும் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான வருடாந்திர மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறுகிறது.

கூடுதலாக, இந்தியாவில் அருகிலுள்ள இடத்திற்கு விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாக்களுக்கான வருடாந்திர மானியம், பல துணைச் சலுகைகள் தவிர, வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகத்திற்குள் விடுதி வசதிகளும் வழங்கப்படும்.

இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன், திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இது குறித்த மேலதிக விவரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்கள் விரைவில் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான www.mohe.gov.lk இல் வெளியிடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை கல்வி அமைச்சினைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.