திரைப்படத்தை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள்
திரைப்படமொன்றை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள் கைதான சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது.
த்ரிஷ்யம் எனும் மளையாள திரைப்படத்தை பார்த்துவிட்டு தந்தையை கொலை செய்த குறித்த மகன்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
புனேவைச் சேர்ந்த தனஞ்செய் நவ்நாத் பன்சோட் அங்கு ஒரு சிற்றுண்டி உணவகத்தை நடத்தி வந்தார். இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த 19ஆம் திகதி மலுங்கே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவருடைய கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் அவர் நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்களாக அடிக்கடி அவர் பேசியது தெரியவந்தது.
குறித்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்,கொளை செய்யப்பட்டவரின் மகன்களான கல்லூரி படிக்கும் சுஜித் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அப்ஜித் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
தனஞ்செய்க்கு நாக்பூர் பெண்ணுடன் சமூக வலைதளம் மூலமாக தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
மேலும், குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் அந்த பெண்ணுடனான உறவை கைவிட மறுத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய மகன்கள் இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சுஜித்,அப்ஜித் இருவரும் மலையாளத்தில் வெளியாகி இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்ட த்ரிஷ்யம் திரைப்படத்தை பார்த்துள்ளனர். ஒரு கொலையை செய்துவிட்டு அதன் வெளியில் தெரியாமல் மறைப்பதுதான் படத்தின் கதை.
அதுபோலவே தங்களது தந்தையை கொன்று அதனை மறைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 15ஆம் தேதி இரவு உறங்கிக்கொண்டிருந்த தனஞ்செய்யை இரும்பு கம்பியால் தாக்கி, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியுள்ளனர். அதில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே தனஞ்செய் உயிரிழந்தார்.
அவரது உடலை சிற்றுண்டி தயாரிக்கும் உலையில் வைத்து எரித்த சகோதரர்கள்,சாம்பலையும் எலும்புகளையும் ஆற்றுப் பகுதியில் வீசியுள்ளனர். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருந்துள்ளனர்.
இந் நிலையில் பொலிஸார் விசாரணையில் சிக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
இருவரையும் கைது செய்த பொலிஸார் ,அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்தமை, தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.