பைக் சாகசத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

இந்தியா – கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார்.

இவர் மீது கேரள போக்குவரத்து துறை சார்பில் கடந்த ஒரு வருடத்தில் 7 முறை அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் அபராதம் கட்டி வைத்து இவரது பைக் வெஞ்ஞாறு மூடு பொலிஸ் நிலையத்திலிருந்து இவர் கையில் ஒப்படைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், பைக் கிடைத்த 2 நாட்களில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவிகள் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் முன்பு சாகசம் காட்டுவதற்காக திடீரென பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் சென்று கொண்டிருந்த மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லம்பலம் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

வெளியான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கேரளா போக்குவரத்து துறை நௌஃபாலை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இவரது சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்வதாகவும் கேரளா போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.