ஆட்டிறைச்சியால் வந்த தகராறு : ஒருவர் படுகொலை
வீட்டில் ஆட்டிறைச்சி சமைப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் கொலையான சம்பவம் இந்தியா – மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் பப்பு அரிஹ்வார் (42). இவருக்கு ராஜி (36) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இதனிடையே, சமீபகாலமாக சிறு சிறு காரணங்களுக்காக கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சில நேரங்களில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பில்லு (30) என்பவர் அடிக்கடி தலையிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரிஹ்வார் வீட்டுக்கு ஆட்டிறைச்சி வாங்கி வந்துள்ளார். பின்னர் தனது மனைவி ராஜியிடம் மதியத்துக்கு அதை சமைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜி, செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ராஜியை, அரிஹ்வார் அடித்திருக்கிறார்.
இந்த சூழலில், இவர்களின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவரான பில்லு அங்கு வந்துள்ளார். அப்போது, ‘செவ்வாய்க்கிழமை வீட்டில் அசைவம் சமைக்கவே கூடாது, இதுதான் இந்துக்களின் ஐதீகம்’ என பில்லு தெரிவித்துள்ளார், மேலும், ராஜி சொன்னதுதான் சரி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அரிஹ்வார், பில்லுவை பார்த்து, ‘இது எங்கள் குடும்பப் பிரச்சினை; நீங்கள் தலையிட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
இதனால் அரிஹ்வாருக்கும், பில்லுவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த அரிஹ்வார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பில்லுவை சரமாரியாக குத்தினார்.
இதையடுத்து, நிலைக்குலைந்து கீழே விழுந்த பில்லு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரிஹ்வாரின் மனைவி ராஜி பொலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
பொலீஸார், அரிஹ்வாரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.