திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணத்தை கண்டறிய கோரிக்கை

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும், புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான காரணத்தை கண்டறிய விஷேட குழு நியமிக்கப்படவேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொது வைத்தியசாலையும் ‘A’ தரத்திலான நான்கு தள வைத்தியசாலையும் ஏனைய வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன.

கிண்ணியா, மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் தரமுயர்த்தப்பட்டாலும் தேவையான போதுமான வசதிகள் தற்போது குறைவாகவே காணப்படுகின்றது

பொறுப்பான அமைச்சர் அதற்கான வசதிகளை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்தவேண்டும் என சுகாதார அமைச்சு சம்பந்தமான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிண்ணியா வைத்தியசாலை தற்போது இட பற்றாக்குறையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது, அங்கு X-Ray இயந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் X-Ray பிரிவினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இதனால் அங்கு வருகின்ற நோயாளிகள் பல கிலோமீட்டர் சென்று சிகிச்சைபெறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் அவசரமாக X-Ray பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் .

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவகம் அதிகூடிய மக்களையும், பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றமையால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை தோப்பூர் பிரதேசத்தை மையமாக கொண்டு புதிய அலுவலகம் அமைக்கவேண்டும் என்பதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தற்காலிக கட்டத்தில் காணப்படுவதால் அதற்கான நிரந்தர கட்டிடத்தையும் அதற்கான வாகன வசதிகளையும் ஏற்படுத்தித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், திருமலை மாவட்டத்தில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறார்கள். தற்போது சிறுவயதினர் உட்பட புற்று நோயாளர்கள் மரணம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற தொலைத்தொடர்பு கோபுரங்களா? என்று மக்கள் சந்தேகின்றனர். திருமலை மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய விஷேட குழுவென்றினை அமைக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.