Last updated on January 4th, 2023 at 06:53 am

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது

-கிண்ணியா நிருபர்-

 

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது, என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகஙாகளுக்கு இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் உயர் அரச உத்தியோகத்தர்களை புறந்தள்ளும் செயற்பாடு ராஜபக்ஸக்களின் ஆட்சிக்காலத்தில் இருந்தது. மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு வெற்றிடமிருந்து தேவையான தகுதியுள்ள உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்த போதும் முஸ்லிம்கள் அல்லது சிறுபான்மையினர் என்பதற்காக ராஜபக்ஸக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

அதேநிலை, இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியிலும் தொடர்கின்றது. இந்த நிலையில் இந்த ஆட்சி சகல சமுகங்களையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சி என எப்படிக் கூற முடியும்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு தற்போது வெற்றிடம் உள்ளது. மாவட்டத்தில் இந்தப் பதவிக்கு தகுதியான சிறுபான்மையினர் 5 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் இப்பதவிக்கு விண்ணப்பித்தும் உள்ளனர்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் யாரையும் நான் சிபார்சு செய்யவில்லை. விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்குங்கள் என்று தான் கூறுகின்றேன்.

எனினும், இவர்களில் எவருக்கும் இப்பதவி வழங்கப்படாது இவர்களை விட அதிக வருடங்கள் சேவைக்காலம் குறைந்த மாற்று மொழி பேசும் ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாங்கமும் இனவாதத்துடன் செயற்படுகின்றது என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.

அரசு என்ற வண்டியின் சாரதி மாறினாலும் வண்டி ஒரே திசையில் தான் செல்கின்றது என்பதற்கு இதனைத் தவிர வேறு என்ன உதாரணம் தேவை.

இந்த நிலையில், சிறுபான்மை சமுகத்தினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் எப்படி நியாயமான தீர்வைப் பெற முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர் இதயசுத்தியுடன்தான் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான முன்னெடுப்பைச் செய்கின்றாரா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்தார்.