
நாட்டில் பொது விடுமுறைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்!
2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1954-ஆம் ஆண்டின் 19-ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் விதிகளுக்கு இணங்க, 1996.10.14 திகதியிட்ட 954/1 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட சட்டரீதியான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை எட்டாகும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
அந்த விடுமுறை நாட்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டில் பின்வரும் தினங்கள் மட்டுமே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
ஜனவரி 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் தினம்
பெப்ரவரி 04 புதன்கிழமை – சுதந்திர தினம் (தேசிய தினம்)
ஏப்ரல் 13 திங்கட்கிழமை -தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினம்
ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை – தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினம்
மே 01 வெள்ளிக்கிழமை – சர்வதேச தொழிலாளர் தினம்
மே 02 சனிக்கிழமை – வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள்
ஓகஸ்ட் 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (முகமது நபியின் பிறந்ததினம்)
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் தினம்
மேற்குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே 2026-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
