பொம்மைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், நேற்று புதன்கிழமை, கொரியர் சேவை ஊடாக, சிறுவர்களின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய, சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது, 43 வயதான காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த பொம்மையின் கழுத்துப் பகுதியில், சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் யாவும், சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சோதனை நடவடிக்கையானது, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் கைதான சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.