இலங்கை அணிக்கு ஐ.சி.சி வழங்கியுள்ள வாய்ப்பு!
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றால், அவர்கள் தமது சொந்த மண்ணிலேயே விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விடுத்துள்ள புதிய அறிவிப்பு தெரிவிக்கின்றது.
குறித்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், மார்ச் 4ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் விளையாடும்.
ஒருவேளை பாகிஸ்தான் தகுதிபெறாமல், இலங்கை அணி தகுதிபெற்று – இந்தியா தவிர்ந்த ஏனைய அணியுடன் மோதும் பட்சத்தில், அந்த போட்டியும் கொழும்பிலேயே நடைபெறும்.
இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றால், அவர்கள் மும்பையில் விளையாடுவார்கள்.
ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அரையிறுதி மோதல் ஏற்பட்டால், அந்த போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.
முன்னதாக நவம்பர் மாதம் வெளியான அறிவிப்பில், பாகிஸ்தான் அணி தகுதிபெற்றால் மட்டுமே போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
தற்போது இலங்கை அணி தகுதிபெற்றாலும் சொந்த மண்ணில் விளையாடலாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியா, இலங்கை அல்லது பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே தகுதிபெறாவிட்டால், முதலாவது அரையிறுதி கொல்கத்தாவிலும், இரண்டாவது அரையிறுதி மும்பையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
