மட்டக்களப்பு ஆயித்தியமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு : 2362 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகூடிய மழை வீழ்ச்சியாக 136 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் 123.3 மில்லிமீற்றர், கிரான் பகுதியில் 126.1 மில்லிமீற்றர், மைலம்பாவெளி பகுதியில் 131 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் இன்று மாலை 4.30 மணி வரையுள்ள காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த 33 குடும்பங்கள் அடங்கலாக இதுவரை 2362 குடும்பங்களைச் சேர்ந்து 7783 பேர் வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 1505 குடும்பங்களைச் சோந்த 4875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 64 குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாழ்நிலப் பகுதிகள் , ஆறுகள் மற்றும் கால்வாய்களுக்கு அண்மையில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ துணை இயக்குனர் எம்.ஏ.சி.எம் ரியாஸ் தெரிவித்துள்ளார்.