அமைச்சருடன் உள்ள முரண்பாட்டிற்காக மக்கள் மீது பாரத்தை சுமத்த வேண்டாம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்ற ஒன்று என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே, இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், நோயாளிகளின் உயிரைப் பிணைக் கைதிகளாக்காமல், நீதிமன்றத்தின் ஊடாகப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நியாயமான காரணங்களுக்காகப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமாயின் எம்மால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் இது விவாதிப்பதற்குக்கூட விடயம் ஏதுமில்லாத, அடிப்படையற்ற ஒரு பணிப்புறக்கணிப்பாகும்.

என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் எனக்குச் சவால் விடுங்கள். அதற்குச் சிறந்த வழி நோயாளிகளின் உயிர்களை இதில் சிக்கவைக்காமல் அவர்களை இதிலிருந்து விடுவிப்பதாகும்.

பயிற்சி நியமனங்களை வழங்குவது சட்டவிரோதமானது எனக் கருதினால், சிறந்த வழி எனக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகும். அப்போது நான் ஒரு தரப்பாகவும், நீங்கள் ஒரு தரப்பாகவும் இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும். எனவே, அமைச்சருடன் உள்ள முரண்பாட்டிற்காக மக்கள் மீது பாரத்தைச் சுமத்த வேண்டாம், எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பயிற்சி வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதற்காக விண்ணப்பிப்பதற்குக் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை எக்காரணம் கொண்டும் நீடிக்கப் போவதில்லை என அமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய, இனிமேல் தாமதமாக விண்ணப்பித்தாலும் அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கோ அல்லது சம்பளம் பெறுவதற்கோ வாய்ப்பு கிடைக்காது என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.