
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தவறவிடப்பட்ட ஐம்பது இலட்சம் பெறுமதியான பயணப்பொதி உரியவரிடம் ஒப்படைப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் பிரயாணியினால் தவறவிடப்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள் அடங்கிய பயணப்பொதி உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்த இரவு 7 மணி கடுகதி புகையிரதத்தில் பயணம் செய்து இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்த ரயிலிலேயே இந்த பொதி தவறவிடப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் இருந்த 50 லட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட நகைகள், பணம், ஏ.டி.எம் அட்டை மற்றும் வங்கிப் புத்தகங்கள் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜாவினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜா தெரிவிக்கையில்,
புகையிரத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர், அவ்வேளையில் புகையிரத நிலையத்தில் உள்ள ஏ.டி.எம் அருகே பயணப்பை ஒன்று காணப்பட்டது. ஒருமணி நேரமாக குறித்த பை அவ்விடத்திலேயே இருந்தது, அப்பையை உரிமை கோரி யாரும் வரவில்லை.
அதன்பின்னர், என்னுடைய அறிவுறுத்தலின் பேரில், எமது ஊழியர்கள் குறித்த பையை பாதுகாப்பாக எடுத்து, அதை திறந்து பார்த்தபோது, அதில் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் இருந்தது.
அதன்பின்னர், குறித்த பையில் இருந்த ஆவணங்களில் இருந்து உரிமையாளரின் தகவல்களை எடுத்து, அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அவர்களை வரவழைத்து, பையில் இருந்த பொருட்களை சரி பார்த்து அவரிடம் பையை ஒப்படைத்தோம், என தெரிவித்தார்.
மேலும் பையை தவறவிட்டவர்கள் மட்டக்களப்பு நகர் பகுதியை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
