Last updated on January 4th, 2023 at 06:53 am

மின்சார கட்டணம் செலுத்துவதாக கூறி 100 மில்லியன் ரூபா மோசடி செய்த 24 வயது இளைஞர்

மின்சார கட்டணம் செலுத்துவதாக கூறி 100 மில்லியன் ரூபா மோசடி செய்த 24 வயது இளைஞர்

மின்சார கட்டணம் செலுத்துவதாக தெரிவித்து, சுமார் 100 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கசினோ விளையாட்டுகளுக்கு தீவிரமாக அடிமையான 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பிரபல கிளப் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சந்தேக நபர் விசாரணையின் போது அவர் இராணுவ சிறப்புப் படையிலிருந்து தப்பியோடியவர் என தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சூதாட்ட விடுதிக்கு வரும் வர்த்தகர்களிடம் மின்சார கட்டணத்தை செலுத்துவதாக கூறி சந்தேகநபர் ஏமாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ரூபா மின்சாரக் கட்டணம் பெறுவோருக்கு கையடக்கத் தொலைபேசி இணைப்பு ஊடாக 20% தள்ளுபடி வழங்குவதாகக் குறிப்பிட்டு நபர் ஒருவர் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

சந்தேக நபர் 60 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் கசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.