அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் “ஆரோக்கியா” திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘ஆரோக்கியா’ திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் இன்று திங்கட்கிழமை முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்கள் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

“ஆரோக்கியா திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதா? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது” என வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் சுகாதாரத் துறையில் பல பாரிய பிரச்சினைகள் இருக்கும்போது, பிரச்சினைகள் இல்லாத இடங்களில் தேவையற்ற புதிய பிரிவுகளைத் திறப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பின் மேல், ‘ஆரோக்கியா’ என்ற பெயரில் மற்றொரு சுமையை ஏற்றுவது தேவையற்றது எனவும், இது வெறும் “அரசியல் விளம்பரத்திற்காக” செய்யப்படும் ஒரு வேலை எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.

இந்த ‘ஆரோக்கியா’ திட்டப் புறக்கணிப்பையும் சேர்த்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்போது மொத்தம் 7 வகையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

“சுகாதாரத் துறையின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல், அரசியல் முகமூடியுடன் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என எமது மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மக்களிடையே தொற்றா நோய்களை (நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவை) ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்காக நாடு முழுவதும் 1,000 ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு ‘ஆரோக்கியா’ திட்டம் 2025 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.