“கம்பளை யுவதியை கொன்று புதைத்ததாக” ஆடு மேய்க்கும் சந்தேகநபர் வாக்குமூலம்

ஆடு மேய்க்கும் நபர் பலவந்த முயற்சி “மறுத்ததால் கொலை செய்து புதைத்தேன்”
“இறுதியாக வீதியில் சென்ற காட்சி பள்ளிவாசல் சிசிரிவியில் பதிவு”

கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன யுவதியை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் காணாமல் போன பாத்திமா முனவ்வரா (வயது-22) தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஆடு மேய்க்கின்ற நபர் ஒருவர் அவரை பலவந்தம் செய்ய முயன்றுள்ளார்.
இந்தநிலையில் அவர் தனது மறுப்பை வெளியிட்ட நிலையில், பெண்ணை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலத்தை புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்த போதிலும், குறித்த பெண்ணின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது சம்பவ இடத்தில் இருந்து அவரது குடையின் பாகங்கள், ஜோடி செருப்புகள் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிவதாக, அவரது சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக பாத்திமாவின் தாயார் சித்தி சாஹிரா தெரிவித்தார். பஸ் கட்டணமாக நூறு ரூபாய் மாத்திரம் கேட்டதாகவும், அவருக்கு மேலும் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும், சம்பவத்தன்று தந்தையும் ஒரு சகோதரனும் கொழும்பு பகுதிக்கு சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களிலும் உறவினர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் அவரைத் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கிவல்லை என, அவரது தந்தை எல். ஜின்னா தெரிவித்தார்.

மருந்தகத்தின் சாவியும் அவளிடம் இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை 11.00 மணியளவில் அதன் உரிமையாளர் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததால்தான் தன் மகள் வேலைக்குச் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தனது பணியிடத்திற்கு பஸ்ஸில் செல்ல தனது வீட்டிலிருந்து வெலிகல்ல வரை சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதுடன், குறித்த வீதியில் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் சிசிரிவி கமெராவில் பாத்திமா வீதியில் செல்வதைக் காணக்கூடியதாக இருந்த போதிலும் அதனைத் தொடர்ந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிசிரிவி கமெராவில் அவர் செல்வது பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து இவ்வாறு பணியிடத்திற்குச் சென்ற பாத்திமா முனவ்வரா வீடு திரும்பாத நிலையில், கடந்த 5 நாட்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி ஆற்றங்கரையில் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அப்பெண்ணை கொலை செய்ததாக வாக்கு மூலமளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.