
இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்குவது இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும், என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு உள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிகமாக 5 லீற்றர் வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி கடந்த முதலாம் திகதி முதல் மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முச்சக்கரவண்டிகளின் பதிவு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை சுமார் 9,000 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் 5 லீற்றர் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டுடன் 10 லீற்றர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலதிக எரிபொருள் கோட்டாவான 05 லீற்றரைப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது
இந்த வேலைத்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
