லெபனான்-இஸ்ரேல் பேச்சுவார்த்தையை பரிஸில் நடத்த தயார் என பிரான்ஸ் அறிவிப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, முறையான போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை பாரிஸில் நடத்தத் தான் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் தான் கலந்துரையாடியதாகவும், இதன்போது இஸ்ரேலுடன் “நேரடி விவாதங்களில்” ஈடுபட லெபனான் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லெபனான் மீதான பெரிய அளவிலான தரைவழித் தாக்குதல்களையும், வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், மோதலைத் தீவிரப்படுத்தும் “பொறுப்பற்ற” செயல்களை ஹெஸ்புல்லா அமைப்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் இந்த இராஜதந்திர வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

