முன்னாள் ரெப் இசைக்கலைஞர் நேபாளத்தின் அடுத்த பிரதமராகிறார்!
நேபாளத்தில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், முன்னாள் ரெப் இசைக்கலைஞரும் காத்மாண்டு முன்னாள் மாநகர முதல்வருமான பாலேந்திர ஷா (Balen Shah) தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (RSP) அமோகமாக முன்னிலை பெற்றுள்ளது.
இதன் மூலம் பாலன் ஷா (வயது 35) நேபாளத்தின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில், பாலன் ஷாவுடன் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் ககன் தாப்பா ஆகியோர் போட்டியிட்டனர்.
வெள்ளிக்கிழமை மாலை வரையிலான வாக்கு எண்ணிக்கையின்படி, நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 தொகுதிகளில், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் பாலன் ஷாவின் கட்சி முன்னிலையில் உள்ளது.
நீண்டகாலமாக நேபாள அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த நேபாளி காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
ஒரு கட்டமைப்புப் பொறியாளராக (Structural Engineer) பயிற்சி பெற்ற பாலன் ஷா, நேபாளத்தின் ‘நெப்-ஹொப்’ (Nephop) இசை உலகில் பிரபலமான ரெப் பாடகர் ஆவார். சமூக விழிப்புணர்வு மற்றும் ஊழலுக்கு எதிரான பாடல்கள் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
2022 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் காத்மாண்டு மாநகர சபைக்கு சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் பிரதமர் கே.பி. ஒலியின் கோட்டையாகக் கருதப்படும் ‘ஜாப்பா 5’ (Jhapa 5) தொகுதியிலேயே அவரை எதிர்த்துப் போட்டியிட்டு பாலன் ஷா தற்போது முன்னிலையில் உள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெற்ற பாரிய போராட்டங்களே இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
அந்தப் போராட்டங்களின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர்களின் கோபத்தை வாக்குகளாக மாற்றிய பாலன் ஷா, ஊழல் ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை தனது முக்கிய வாக்குறுதிகளாக முன்வைத்தார்.
19 மில்லியன் வாக்காளர்களில் சுமார் 60% பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் முதல்முறை வாக்களிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் மலைப்பாங்கான புவியியல் அமைப்பு மற்றும் வாக்குப்பெட்டிகளை வானூர்திகள் மூலம் சேகரிக்க வேண்டியுள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாக அடுத்த வாரம் வரை ஆகலாம் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாலன் ஷா வெற்றிபெறும் பட்சத்தில், பல தசாப்தங்களாக நிலவி வந்த நிலையற்ற கூட்டணி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நேபாள அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
